திங்கள், 21 பிப்ரவரி, 2011

தோனி, சச்சினுக்கு மேட்ச் ஃபிக்சிங் அழைப்பு

சிங்களப் பத்திரிகைகளை நமக்குப் பிடிக்காது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவம் ஆகியவற்றின் வாய்கள் அவை. ராஜபக்ஷவின் ஒலிபெருக்கிகள்; ஊது குழல்கள். அப்படி வால்பிடிக்கும் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைளுள் ஒன்று தி ஐலேண்ட்.

இந்தப் பத்திரிகையில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரை பரபரப்பானது. எங்களுக்கு உலகக் கோப்பை வேண்டாம் என்று அந்தக் கட்டுரையை எழுதிய ரசல் கூறியிருந்தார். இலங்கைக் கிரிக்கெட்டில் ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் மலிந்துவிட்டதாகவும் அதனால், இன்னொரு முறை உலகக் கோப்பையை ஜெயிப்பதை நாடு தாங்காது என்றும் அவர் கூறியிருக்கிறார். கேப்டன் சங்ககாரவுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராய்ட்டர்ஸ் நிறுவனம் இதை செய்தியாக்கியதால், உலகம் முழுவதும் பரபரப்பானது.

இதே கருத்தைத்தான் நோஐபிஎல் அதிபரும் பல ஆண்டுகளாகக் கத்திக் கதறிக் கூறிக் கொண்டிருக்கிறார். ராய்ட்டர்ஸ் கண்டுகொள்ளவில்லை. கிரிக்கெட்டை விமர்சித்து எழுதுவதும் இங்கு ஆதரிக்கப்படுவதில்லை. அந்த அளவு உணர்வு ரீதியாக மக்கள் கிரிக்கெட்டுக்குள் பிணைந்து போயிருக்கிறார்கள். அதனால், அதில் நடக்கும் ஊழல்கள் பற்றி மக்கள் கண்டுகொள்வதில்லை.

லலித் மோடி என்பவரை நமக்குத் தெரியும். மிகத் திறமையானவர். எல்லா வகையான பணிகளையும் மிகப் பொறுப்பாகவும் மிகப் பிரமாண்டமாகவும் செய்யக் கூடியவர். ஆனால் நேர்மை என்று நடுத்தர வர்க்கம் பிதற்றிக்கொண்டிருக்கிறதே... அதுதான் அவரிடம் கிடையாது. பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தார். வரி ஏய்ப்பு செய்தார். வெளிநாட்டில் போய் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பஸ் டே கொண்டாட்டம் உள்பட எல்லா விஷயத்திலும் சட்டம் தனது கடமையை பொறுமையாகத்தான் செய்யும் என்று கூறிக் கொண்டிருக்கும் நம்மூர் கமிஷனர், மோடிக்கு காதல் கடிதம் எழுதிவிட்டு காத்திருக்கிறார். இனிமேல் கடிதமும் எழுதப்போவதில்லையாம். ஆக, விஷயம் முடிந்தது.
வழக்குத் தொடர்ந்தவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல. புகார் கொடுத்துவிட்டு நல்லவர்களாகிவிட்டார்கள். அவ்வளவுதான். மோடி இங்கே வந்து வழக்கைச் சந்தித்தாலும் பலருக்கு ஆபத்துதான். அதனால்தான் சுபம் போடப்பட்டிருக்கிறது.  இதனாலென்ன, உனக்கென்ன நஷ்டம், நாட்டு மக்களுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கலாம்.

காமன் வெல்த் போட்டியில் கொள்ளை அடித்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள், முறைகேடுகள் அம்பலமானதும் சிறைக்குச் சென்றார்கள். வழக்கு நடந்து அவர் குற்றமற்றவர்கள் என்று கூட நிரூபிக்கப்படலாம். ஆனால், ஏதோ அவர்களைக் கைது செய்யவாவது முடிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கட்டுக்கடங்காத பலம் கொண்டு திமுகவின் அமைச்சரே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இது நாடகமா உண்மையா என்று தெரியாது. ஆனாலும் காவலர்கள் பிடித்து இழுத்துச் செல்வதே பெரிய தண்டனைதான்.

ஆனால் கிரிக்கெட்டில் மோசடி என்கிற குற்றச்சாட்டே கிடையாது. வரி ஏய்ப்பு மட்டும்தான். ஏனென்றால் அது பிசிசிஐயின் தனிப்பட்ட விவகாரமாம். வரியைக் கட்டிவிட்டால், அல்லது கணக்குக் காட்டிவிட்டால் மோடி மஸ்தானுக்கு சசி தரூரின் இருக்கையைக் கூடக் கொடுப்பார்கள்.

இதெல்லாம் நம்மை எந்த விதத்தில் பாதிக்கும் என்று கேட்கலாம். ஸ்பெக்ட்ரம் ஊழலால் பணம் கொள்ளை போனது தெரியும். ஆனால், அதுதான் தமிழகத்தில் ஜனநாயகத்தையே விலைக்கு வாங்கப் பயன்பட்டது என்கிற கோணத்தில் யார் பார்க்கிறார்கள். அந்த வெற்றிதான் மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு வழியில்லாமல் செய்துவிட்டது. அதுதான் மே 18 முடிவுக்குக் காரணமாக அமைந்தது. இந்த வெற்றியால் கிடைத்த தெனாவெட்டுதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணய உரிமையை கம்பெனிகளிடமே கொடுக்கச் செய்தது. நீதிபதியை மிரட்டச் செய்ததும், பல்கலைக்கழக ஆவணங்களைத் திருத்தச் செய்ததும்கூட இதனால்தான்.

கிரிக்கெட்டும் இப்படித்தான். சரத் பவாரை மந்திரி வேலையிலிருந்து நீக்குவதற்கு சோனியா உள்பட யாருக்கும் துணிச்சலும் அதிகாரமும் இல்லையே ஏன்? ஐபிஎல் மூலமாகவும் விமானப் போக்குவரத்துத் துறை மூலமாகவும் நாட்டு மக்களை ஏமாற்றிய பிரபுல் படேலுக்கு முக்கியப் பதவி ஏன் வழங்கப்பட்டிருக்கிறது? இப்படி பல கேள்விகள் நம்மிடம் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் கிரிக்கெட்தான். இப்படி முறைகேடாகச் சம்பாதிக்கும் பணம் குறுக்கு வழிகளை உருவாக்குவதற்குத்தான் பயன்படுத்தப்படும்.
சச்சினும் தோனியும் இப்படிச் சம்பாதிக்கிறார்களா என்று தெரியாது. அவர்களுக்கு மேட்ச் ஃபிக்சிங்கில் நம்பிக்கை இருக்கிறா என்பது பற்றியும் பேச விரும்பவில்லை.

அவர்களிடம் நாம் முன் வைக்கும் கோரிக்கை இதுதான். நீங்கள் இருவரும் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட வேண்டும். புக்கிகளுடன் அல்ல... நாட்டு மக்களுடன்தான். முடிந்தவரை முட்டை அடியுங்கள். இல்லாவிட்டால் மற்றவர்களை ரன்அவுட் ஆக்குங்கள். நோபால் போடச் செய்யுங்கள். எப்படியாவது, இந்த முறை உலகக் கோப்பை என்கிற மாயை நமக்குக் கிடைக்கக்கூடாது. அடுத்த முறை உலகக்கோப்பை என்ற ஒன்றே இருக்கக்கூடாது. அது உங்கள் பொறுப்பு.
..
..
.

1 கருத்து:

  1. //முடிந்தவரை முட்டை அடியுங்கள். இல்லாவிட்டால் மற்றவர்களை ரன்அவுட் ஆக்குங்கள். நோபால் போடச் செய்யுங்கள். எப்படியாவது, இந்த முறை உலகக் கோப்பை என்கிற மாயை நமக்குக் கிடைக்கக்கூடாது. அடுத்த முறை உலகக்கோப்பை என்ற ஒன்றே இருக்கக்கூடாது. அது உங்கள் பொறுப்பு.//

    இத்தனை நாளா அதைத்தான் செய்துட்டு இருக்காங்க.

    பதிலளிநீக்கு