திங்கள், 14 பிப்ரவரி, 2011

தோனி முட்டை அடித்தது ஏன்? தென்னாப்பிரிக்கா தோற்றது ஏன்?

வழக்கமாகவே நோஐபிஎல் அதிபருக்கு தூக்கத்தில் கனவு வரும். இந்திய கிரிக்கெட் அணிக்காகக் களமிறங்கி வங்கதேச அணியைப் பழிவாங்குவது போன்ற கனவு அது. நாட்டுப் பற்றுக் கொண்ட அனைவருக்கும் வரக்கூடிய கனவுதான் அது. நோஐபிஎல் அதிபருக்கு கடந்த சில நாள்களாக அப்துல் கலாம் சொன்னது போல 2020 பற்றிய கனவு வருகிறது.
 அது 2020ம் ஆண்டு. லீப் வருடம் என்று காலண்டர் சொன்னது. நன்றாக நினைவுக்கு வருகிறது பிப்ரவரிக்கு 29 நாள்கள். குட்ரோச்சி வெளியுறவு அமைச்சராகவும் அஜ்மல் கசாப் உள்துறை அமைச்சராகவும் இருப்பது போன்று அந்தக் கனவில் தெரிகிறது. இதில் அதிர்ச்சியாகி நின்றால், அந்தப் பக்கம் ராணுவ அமைச்சராக எகிப்தின் ஹோஸ்னி முபாரக் இருக்கிறார். இதெல்லாம் எப்படி சாத்தியம், இது இந்தியாதானே இங்கு எப்படி குட்ரோச்சியும் ஹோஸ்னி முபாரக்கும் வந்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. சரி அது போகட்டும் பிரதமர் யாரென்று பார்த்தால் ஆ..... ராசா. ஆ.... அவரது அலுவலக வாசலில் ஒரு போர்டு இருந்தது.  அதில் "முதலில் வருவோருக்கு முன்னுரிமை" என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. கூடவே, முந்தைய அரசின் கொள்கைகளையே எப்போதும் பின்பற்றுவோம் என்றும் எழுதப்பட்டிருந்தது. குட்ரோச்சி, கசாப், முபாரக் எல்லாம் எப்படி அமைச்சரானார்கள் என்பது இப்போது புரிந்துவிட்டது. ராசா ராசாதான்...

 இந்தப் பக்கம் 2023-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவுக்குத்தான் என்று இனிமையான குரல் கேட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று சச்சின் அறிவித்திருப்பது செய்தித்தாள்களில் தெரிந்தது. உலகக் கோப்பையை சச்சினுக்குப் பெற்றுத்தருவதே தனது லட்சியம் என்று கேப்டன் கேணி அறிவித்திருந்தார். சச்சின் தெண்டுல்கரின் ஆட்டமே தங்களுக்கு பெரிய பலம் என்றும் அவர் கூறியிருந்தார். 120 சதம் அடித்த நாயகனே என்றும் அவரைப் பற்றிய எஸ்எம்எஸ்கள் வந்துகொண்டிருந்தன. இதற்கு மேல் அந்தக் கனவைப் பற்றிச் சொல்ல முடியாது. தேச நலனுக்கு உகந்தது இல்லை என்பதால் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று... விட்டுவிடலாம்.
---

உலகக்கோப்பை ஆட்டங்களிலேயே மிகச் சிறப்பான போட்டி எது கேட்டால் எல்லோரும் சொல்வார்கள் 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டிதான் என்று. இன்றைக்கும் அப்படித்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் ஆஸி 213 ரன்கள் அடித்தது. க்ளுஸ்னரும் டொனால்டும் களத்தில் இருந்தபோது, தென்னாப்பிரிக்கா சரியாக 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இரண்டும் சம பலம் வாய்ந்த அணிகள் என்று சொல்லப்பட்டன. தென்னாப்பிரிக்காவுக்கு துரதிருஷ்டம் பின்தொடர்வதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தொடர் முழுவதுமே காதில் ஹெட்போனுடன் மைதானத்தில் வலம் வந்துகொண்டிருந்த குரோனியேவை எல்லோரும் மறந்துவிட்டார்கள். மேட்ச் ஃபிக்சிங்கில் சர்ச்சையில் சிக்கிய அவர், அந்தப் போட்டியில் எடுத்த ரன்கள் முட்டை.... தலைப்புக்கு முழு அர்த்தத்தையும் இதற்கு மேல் விவரிக்க முடியாது. கூறியது கூறல் என பொதுஜனம் கோபித்துக் கொள்ளும்.

பின்குறிப்பு: எதையாவது கண்டுபிடித்துக் கூறினால் சிறந்த கண்டுபிடிப்பாளர் பட்டம் கொடுக்கவேண்டுமே தவிர, எஸ்எம்எஸ் மூலம் இலக்கணப் பிழைகளுடன் மிரட்டல் விடுக்கக்கூடாது.
.
.
.

1 கருத்து: