செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஐபிஎல் கோனார் நோட்ஸ்: ஆளுக்கொரு குறள்


 பத்து நாளாக தாடி வெச்ச பெரியவர் கனவில் வந்து கொண்டேயிருந்தார். நான்கூட பெரியார்தான் வந்துவிட்டார் போலிருக்கிறது, அவரைப் பற்றிச் சொன்னால் கூட்டமாக லைன் கட்டிவிடுவார்கள் என்று இதுவரை யாரிடமும் கூறாமல் இருந்தேன். இன்றைக்கு காலையில்தான் சன் நியூஸ் நிஜம் நிகழ்ச்சியில், கனவில் வருபவர் திருவள்ளுவர் என்று சொன்னார்கள். அவர் என்னதான் சொல்லவருகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். அவரேதான். ஐபிஎல் பற்றிய நமது ப்ளாக்கைப் பற்றி மிகவும் மெச்சிக் கொண்டார். இந்தக் கருத்துகளும் நமது உலகப் பொதுமறையில் உள்ளதைச் சுட்டிக் காட்டினார். அவர் சொன்னதுபடி இன்றைக்கும் நமது ஐபிஎல்காரர்களுக்குப் பொருந்தும் அறிவுரை மாதிரியான குறள்களை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.


லலித் மோடி

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

மரத்தின் நுனிக் கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால், அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.



---------------------------------

சச்சின் தெண்டுல்கர்

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.



---------------------------------

சௌரவ் கங்குலி
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.
---------------------------------


யுவராஜ் சிங்

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனுமாகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவில் கெடுவான்.

---------------------------------
மகேந்திர சிங் தோனி

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

---------------------------------
வீரேந்திர சேவக்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.

இடித்துச் சொல்லி திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.

---------------------------------
திராவிட்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

---------------------------------

ஷேன் வார்னே

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரைவிட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.

---------------------------------
முரளி விஜய்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இந்தச் செயலை இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச்செயலை அவனிடமே செய்யுமாறு விட்டுவிடுதல் வேண்டும்.

---------------------------------
ஸ்ரீசாந்த்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

அரசன் சினங்கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.


---------------------------------
லட்சுமிராய்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயானும் சொல்ல மாட்டாயோ?


---------------------------------

அம்பயர் பில்லி பௌடன்


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.

---------------------------------

கபில்தேவ்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிங்கிச்
இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே துõண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர்.
 

---------------------------------

ப்ரீத்தி ஜிந்தா


இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்.

துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

..

.
.

3 கருத்துகள்:

  1. திருக்குறளை மனதில் பதிய வைப்பதில் இதைவிட வெற்றிகரமான வழி வேறு இல்லை எனலாம்.
    வாழ்த்துக்களோடு சேர்ந்த பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி கோமா, முகிலன்....

    மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.

    மாசு இல்லாத நல்லவங்க உறவை மறக்கக்கூடாது. நெருக்கடி நேரத்தில் நமக்கு உதவினவங்கள் என்னிக்குமே மறந்துவிடக்கூடாது.

    பதிலளிநீக்கு